ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. ஊட்டியில் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்கா உள்ளது. குன்னூரில் காட்டேரி பூங்கா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளன. தொட்டபெட்டா அருகே தேயிலை தோட்டம் உள்ளது. இந்த பூங்காவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்த பூங்காக்களில் ஆண்டுதோறும் பல்வேறு வளர்ச்சி மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேயிலை தோட்டத்தில் அழகிய தேயிலை தோட்டங்கள், புல்வெளிகள், தேயிலை தோட்டங்களுக்கு நடுவில் அழகான இருக்கைகளுடன் கூடிய நிழல் குடில்கள், விளையாட்டு உபகரணங்கள் என பல்வேறு வசதிகள் உள்ளன.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டங்களுக்கு நடுவில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதேபோல் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள புல்வெளிகளில் விளையாடி மகிழ்கின்றனர். இந்த பூங்காவில் பல்வேறு அலங்கார நாற்றுகள், மலர் நாற்றுகள், பழ மரக் கன்றுகள் மற்றும் தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இந்த பூங்காவில் பசுந்தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் இந்த பூங்காவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் நாற்றங்கால் அமைக்கப்பட்டது. அதில் பல்வேறு மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது அந்த இடத்தில் பூங்கா விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
படித்துறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் புதிய பூங்கா அமைக்கப்படும். இதில், சிறிய புல்வெளிகளும், அதன் ஓரங்களில் அலங்கார மலர் செடிகளும் நடப்படும். மேலும், ஆங்காங்கே மலர் செடிகளும் நடப்படும். இதுதவிர இந்த புல்வெளிகளுக்கு நடுவில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்காக இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி இந்த புல்வெளிகளுக்கு நடுவே அலங்கார நடைபாதைகளும் அமைக்கப்படும். தேயிலை தோட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இது புதிய அனுபவமாக இருக்கும். இதற்கான பணிகள் துவங்கி தற்போது வேகமாக நடந்து வருகிறது. வரும் கோடை காலத்துக்குள் இப்பணியை முடித்து சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் தேயிலை தோட்ட நிர்வாகம் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.