மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் இல்லாத நிலையில் நிர்வாகத்தை கவனிக்க உயர்கல்வி ஆணையர் சுந்தரவல்லி தலைமையில் 3 பேர் கொண்ட ‘கன்வீனர்’ குழு நியமிக்கப்பட்டது. தற்போது, இந்த குழுவில் உள்ள 3 பேரில் ஒருவர் நீக்கப்பட்ட நிலையில், மற்றொருவரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதற்கிடையில், பல்கலை நிர்வாகத்திற்கு உதவும் வகையில், பதிவாளர், தேர்வாளர், டீன், தொலைதூர கல்வி இயக்குனர், கூடுதல் தேர்வாளர் (தேர்வு துறை) பதவிகளை கவனிக்க, மூத்த பேராசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தப் பணியிடங்களுக்கு நிரந்தரமாக ஆட்களை நியமிக்க உயர்கல்வித்துறை மூலம் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு, டிச., 7-ல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பதிவாளர், தேர்வு அலுவலர், கூடுதல் தேர்வு அலுவலர், தொலைதூரக் கல்வி இயக்குனர் பதவிகளுக்கு தகுதியான பேராசிரியர்கள், டிச., 30-க்குள் பல்கலை பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் (https://mkuniversity.ac.in) தெரிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் இதர நிர்வாக பணிகள் தொடர்பான முடிவுகளை விரைவாக எடுக்க முடியும் என பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், “பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்புடைய பதிவாளர், தேர்வு அலுவலர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்களுக்கு பேராசிரியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்வது வழக்கம் என்றாலும், மாணவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள் நலன் கருதி முடிவெடுப்பதில் சற்று தயக்கம் உள்ளது. மேலும், அவர்களுக்கு எதிரான அதிருப்தியை கருத்தில் கொண்டு, அந்த பதவிகளுக்கு நிரந்தர ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.