ஏமன்: ஹமாஸுக்கு எதிரான போரில் காஸாவில் அழிவை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல், ஹமாஸ் ஆதரவு நாடுகள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு இஸ்ரேல் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது.
ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதல், பயணிகளை நாலாபுறமும் சிதறடித்தது. இஸ்ரேலின் கொடூர தாக்குதலால் விமான நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. மூன்று துறைமுகங்களும் தாக்கப்பட்டன. மேலும், மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களால் மின்சார விநியோகம் தடைப்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏமன் மீது தாக்குதல் நடத்த போர் விமானங்கள் புறப்படும் காட்சிகளை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. சனா விமான நிலையத்தில் விமானம் தாக்கப்பட்டதில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் உயிரிழப்பிலிருந்து தப்பினார்.
தற்போது அவர் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளார். தாக்குதல் குறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்கள் பணி முடியும் வரை தாக்குதல்கள் தொடரும் என்று கூறினார். ஈரானுடன் கூட்டணி வைத்துள்ள ஏமன் கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.