திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் வரும் 11-ம் தேதி நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மகரவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் 92,715 பேர் தரிசனம் செய்தனர். இந்த மகரவிளக்கு காலத்தில் நேற்று இரவு வரை 9 நாட்களில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஆன்லைன் முன்பதிவு வரும் 16-ம் தேதி வரை முடிவடைந்ததால், பெரும்பாலான பக்தர்கள் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், கடந்த சில நாட்களாக உடனடி முன்பதிவு வசதியை பயன்படுத்தி தினமும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் 14-ம் தேதி நடக்கிறது. மகரவிளக்கு பூஜையையொட்டி நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் வரும் 11ம் தேதி நடக்கிறது. எருமேலியில் பக்தர்கள் தங்கள் உடலுக்கு வண்ணமயமான சாயம் பூசி நடனமாடுவார்கள். பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து திருவாபரண ஊர்வலம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு: மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று (8-ம் தேதி) முதல் 15-ம் தேதி வரை உடனடி முன்பதிவு எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் முன்பதிவுகளின் எண்ணிக்கை ஜனவரி 12-ம் தேதி 60,000 ஆகவும், ஜனவரி 13-ம் தேதி 50,000 ஆகவும், ஜனவரி 14-ம் தேதி 40,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் புல்மேடு காட்டுப்பாதை வழியாக சபரிமலைக்கு சென்ற சென்னையை சேர்ந்த லீலாவதி, அந்தோணி, பெரியசாமி, மதுரையை சேர்ந்த லிங்கம் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தொடர முடியாமல் தவித்தனர். இது குறித்து இரவு 8 மணியளவில் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த பாதையில் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால், வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.
நீண்ட தேடுதல் மற்றும் மீட்புக்கு பின் இரவு 11 மணியளவில் மீட்கப்பட்டு சபரிமலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர். வண்டிப்பெரியார் சத்திரம் பகுதியில் இருந்து புல்மேடு வனப் பாதை தொடங்குகிறது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே சத்திரம் பகுதியில் இருந்து காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், அழுதக்கடவு மற்றும் முக்குழியில் இருந்து மாலை 4 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த ஆண்டு புல்மேடு வனப்பாதை வழியாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் பக்தர்கள் வழி தவறி சிக்கி தவிக்கும் சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன. எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் சத்திரம் பகுதியில் இருந்து காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.