டெல்லி: கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கும் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 75-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தியாவும் சீனாவும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன! இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் நேற்று முடிவு செய்தன.
கொரோனா தொற்று மற்றும் எல்லைப் பதற்றம் காரணமாக இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்ட பிறகு, 2020-க்குப் பிறகு நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கும். பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்காக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரண்டு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.
மிஸ்ரி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடந்த ஆண்டு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். அப்போது, எல்லைப் பிரச்னையில் இருநாட்டுத் தலைவர்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் செயல்படுத்தி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மக்களிடையேயான தொடர்புகளை மேம்படுத்தவும், இருதரப்பு உறவுகளை மறுசீரமைக்கவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கு பின், இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவையை துவக்க, இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.இதற்காக, இருநாட்டு நிபுணர் குழு விரைவில் சந்தித்து, நடைமுறைகளை வகுக்கும்.
கைலாஷ்-மானசரோவர் யாத்திரையை 2025 கோடையில் இருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாங் யி சீன வெளியுறவு அமைச்சர் மட்டுமல்ல, இந்தியா-சீனா உறவுகளுக்கான சீனாவின் சிறப்புப் பிரதிநிதியும் ஆவார். கடந்த மாதம் இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து விக்ரம் மிஸ்ரி இரண்டு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.
சீனா-இந்திய உறவுகள் மேம்படுவது இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, தெற்கில் உள்ள நாடுகளின் பாதுகாப்பிற்கும் நன்மை பயக்கும். குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.