சென்னை: தெற்கு ரயில்வேயின் 69-வது ரயில்வே வார விழாவின் ஒரு பகுதியாக, ரயில் சேவைக்கான சிறப்பு விருது வழங்கும் விழா, சென்னையில் உள்ள ஐசிஎப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தலைமை வகித்து, பல்வேறு ரயில்வே கோட்டங்கள், பல்வேறு ரயில்வே துறைகள் மற்றும் பணிமனைகளில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கேடயங்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.
விழாவில், பொது மேலாளர் ஆர்.என். சிங் ரயில்வேயின் வளர்ச்சி மற்றும் செயல்திறனில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக விருது பெற்றவர்களை பாராட்டினார். ரயில்வே கோட்டங்கள் மற்றும் பணிமனைகளின் ஊழியர்களின் சிறப்பான செயல்பாடுகளை அவர் பாராட்டினார். பின்னர் அவர் பேசுகையில், ”திட்டங்களைச் செயல்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரயில்வே வழித்தடத்தில் வேகத்தை அதிகரித்தல், நவீன பெட்டிகளை அறிமுகப்படுத்துதல், பயணிகள் வசதிகள் மற்றும் உள் சேவைகளை மேம்படுத்துதல் போன்றவற்றில் தெற்கு ரயில்வே முன்னணியில் உள்ளது.
விழாவில் தெற்கு ரயில்வேயின் 2024 சாதனைகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுஷல் கிஷோர், தலைமை பணியாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொது மேலாளருக்கான ஒட்டுமொத்த திறன் கேடயத்தை திருச்சிராப்பள்ளி பிரிவு வென்றது. பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்டங்கள் இரண்டாமிடம் பெற்றன. 38 ரயில்வே பணியின் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பல்வேறு பிரிவுகள் மற்றும் பணிமனைகளுக்கு திறன் கேடயங்கள் வழங்கப்பட்டன.
26 அதிகாரிகள், 71 ஊழியர்கள் என மொத்தம் 97 தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு ‘தனிநபர் விருதுகள்’ வழங்கப்பட்டன. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற ரயில்வே பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கும் தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.