சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ரூ.194.67 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுயஉதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் சென்றடையச் செய்யும் வகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம், மண்டல அளவிலான சரஸ் கண்காட்சி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான விற்பனை கண்காட்சி, கல்லூரி சந்தைகள் போன்றவை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஆன்லைன் விற்பனை மூலம் விற்பனை செய்ய, Amazon, Flipkart, Meeso, India Mart, Jio Mart போன்ற முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் மொத்தம் 4,235 பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், இதுவரை சுயஉதவி குழுக்களின் தயாரிப்புகள் மதி அனுபவ அங்காடி, சிறுதானிய உணவகங்கள், இயற்கை சந்தை, மதி மொபைல் விற்பனை வாகனம், அடுக்குமாடி விற்பனை சந்தை மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் ரூ.194.57 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.