சென்னை/திருவாரூர்: காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பழனிசாமி: காவிரி ஆணையத்தின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் போக்கு கடும் கண்டனத்துக்குரியது. காங்கிரசுக்காக தமிழகத்தின் வாழ்வாதார உரிமையை தமிழக முதல்வர் விட்டுக் கொடுப்பது சரியல்ல. மேடையில் மாநிலம் என்று பேசிவிட்டு தமிழக மக்களின் வாழ்வில் விளையாடுவது கண்டிக்கத்தக்கது. டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை முதல்வர் பெற்றுத் தர வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம்: தண்ணீர் திறக்க மாட்டோம் என கர்நாடக முதல்வர் கூறியிருப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். கர்நாடக அரசிடம் பேசவோ, அழுத்தம் கொடுக்கவோ திமுக முன்வராதது கண்டிக்கத்தக்கது.
அண்ணாமலை: கர்நாடகாவில் பாஜ ஆட்சியில் இருந்தபோது வறட்சியிலும் தண்ணீர் திறந்து விட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகுதான் பிரச்னை ஏற்பட்டது. எனது உருவபொம்மையை எரிக்கும் தமிழக காங்கிரஸார், சித்தராமையாவை சந்தித்து தண்ணீர் திறக்கச் சொன்னால் பாராட்டியிருப்பேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கர்நாடகாவில் உள்ள அணைகள் முழு கொள்ளளவைக் கொண்டாலும் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக முதல்வர் கூறி வருவது கண்டிக்கத்தக்கது. மத்திய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த வேண்டும். கர்நாடக அரசின் அநீதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி மற்றும் விவசாய இயக்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய அவசர கூட்டத்தை கூட்டி உரிய முடிவு எடுக்க வேண்டும்.