சென்னை: பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. பீட்ரூட் ஜூஸ் பருகினால் வயதானாலும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? என்று ஒரு ஆய்வு நடத்தினார்கள். அதன்படி பீட்ரூட் ஜூஸ் பருகினால் வயதானாலும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறதாம்.
மனிதனுக்கு தேவையான ஆக்சிஜன் அளவை நைட்ரேட் என்கிற சத்து வெகுவாக குறைப்பதாக ஏற்கனவே நடத்தப்பட்ட பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் பீட்ரூட் சாப்பிடும்போது நைட்ரேட்டை உருவாக்குவதற்கான ஆக்சிஜன் தேவைப்படாது. வாரத்துக்கு 6 நாட்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன், சோம்பலும் வராது என்று இங்கிலாந்தின் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இதன் தலைவர் விஞ்ஞானி கேட்டி வான்லி, “முதியவர்கள் சிறிய வேலைகளை செய்தாலும் சோர்வடைந்து விடுகிறார்கள். வயதாகும்போது அவர்களின் உடலில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கி விடும் என்பதுதான் இதற்கு காரணம். இதனால் திசுக்களுக்கு போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காது. எனவே, ஆய்வில் கலந்து கொண்ட முதியவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை குறைப்பதற்காக பீட்ரூட் ஜூஸ் கொடுக்கப்பட்டது.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் சத்து, அவர்களின் ரத்த நாளத்தை விரிவடைய செய்தது. ரத்த ஓட்டம் எளிமையாக நடந்தால் திசுக்களுக்கு வழக்கமாக தேவைப்படும் ஆக்சிஜன் அளவு 12 சதவீதம் குறைந்தது. அவர்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தாலும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக இருந்தார்கள்,” என்றார்.
அதேநேரம் பீட்ரூட் ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் உடல்நிலையை பொறுத்து செயல்படக்கூடியது. அதனால் பீட்ரூட் அருந்துவதற்கு முன்பு முதியவர்கள் தங்கள் உடலுக்கு ஒத்துவருமா? என்று டாக்டரிடம் ஆலோசனை கேட்டு அதன்பின் அருந்துவது நல்லது.