தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அறுமலைக்கோட்டை பகுதியில் தாளடி பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்கும் பணிகளில் வெகுவாக மும்முரம் காட்டி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயப்பணிகளில் முடக்கம் ஏற்பட்டது. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததாலும், கடும் பனியினாலும் தாளடி சாகுபடி பயிர்களில் ஆங்காங்கே பூச்சி தாக்குதல் தென்பட்டது. தற்போது மழை பெய்யாத நிலையில் வயல்களில் களைகள் அதிகளவில் மண்டின. இதையடுத்து களைகளை அகற்றும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது.
இந்நிலையில் காலை 9 மணியளவிலும் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் அறுமலைக்கோட்டை பகுதியில் விவசாயிகள் தாளடி பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்கும் வகையில் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பான் மூலம் அடித்து வருகின்றனர். இன்னும் 4 வாரத்தில் அறுவடைப்பணிகள் ஆரம்பித்து விடும் என்பதால் விவசாயப்பணிகள் வெகுவாக சுறுசுறுப்படைந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கையில், விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் பாதிக்கப்படும் என்பதால் பூச்சி மருந்து அடிக்கும் பணிகளை ஈடுபட்டுள்ளோம். மாலை வேளையில் பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படக்கூடாது என்பதால் காலை வேளையில் முடிக்க வேண்டும் என்று செய்து கொண்டிருக்கிறோம். மேலும் பயிர்கள் நன்கு செழித்து வளர பல பகுதிகளில் களைப்பறித்தல் மற்றும் உரம் தெளிக்கும் பணிகளும் நடந்து வருகிறது என்றனர்.