தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிக்கு எஸ்.ஆர்.எம் நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் செய்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடைப் பணி என்பது அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் நிரந்தர அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையமும் , தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க, விவசாயிகளின் பிரச்சினை தீர்க்க தற்போது (பொறுப்பு ) நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் செயல்பட்டு வருகிறார். இவரிடம் தொலைபேசியில் நெல் கொள்முதல் நிலையங்களில் தரமான சாக்குகளை வழங்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள சாக்குகள் கிழிந்து ஓட்டையாக உள்ளதால் நெல்மணிகள் கொட்டும் நிலையில் விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள்,
சுமை தூக்கும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றார்கள் நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறினால், பொறுப்பாக தகுந்த பதிலை சொல்ல மறுக்கும் நிலையில் செயல்பட்டு வருகிறார். இந்த நடவடிக்கை விவசாயிகளை பாதிக்கும் நடவடிக்கையாக உள்ளது. உடனடியாக நெல் கொள்முதல் பணியை கண்காணிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை அரசு நியமனம் செய்து கொள்முதல் பணியை கண்காணித்து விவசாயிகளின் குறையை கேட்டறிந்தால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.
இந்த நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.