இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு டால்பி அட்மாஸ் ஒலியுடன் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1993-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான இந்தப் படம், அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், கல்வி வாய்ப்புகளில் காணப்படும் அநீதி, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வேறுபாடு போன்ற கருத்துகளை விறுவிறுப்பான ஆக்ஷன் கதையுடன் இணைத்து ஷங்கர் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்.
இதில் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்தார். மாதூ, சுபாஷ்ரி, எம்.என். நம்பியார், மனோரமா, ராஜன் பி. தேவ், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
பணக்காரர்களிடமிருந்து பணத்தைத் திருடி ஏழைகளுக்கு உதவும் கதாநாயகனின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், திரையரங்குகளில் 175 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது.
இப்படத்தின் மற்றொரு மிகப்பெரிய பலமாக ஏ.ஆர். ரஹ்மானின் இசை அமைந்தது. ‘சிக்கு புக்கு ரயிலே’, ‘உசிலம்பட்டி பெண் குட்டி’, ‘என் வீட்டு தோட்டத்தில்’, ‘ஒட்டகத்தை கட்டிக்கோ’ உள்ளிட்ட பாடல்கள் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன.
தற்போது நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வெளியாக உள்ளதால் பழைய ரசிகர்கள் மட்டுமின்றி புதிய தலைமுறை ரசிகர்களும் இந்தப் படத்தைத் திரையரங்கில் ரசிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
