சென்னை: கொழுத்தவனுக்கு கொள்ளு… இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது கிராமத்து மொழி. அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. ஆனால், கொள்ளு என்பது குதிரைத் தீவனம் என்கிற நம்பிக்கையில், அதை லட்சியமே செய்வதில்லை பலரும். இந்த கொள்ளுவில் துவையல் செய்து சாப்பிடுவதால் ஆரோக்கியம உயரும்.
புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம். புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இரு வகை உண்டு.
பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு வகையறாக்கள் இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும்.
தேவையான பொருட்கள்
கொள்ளு 1/4 கப்
துவரம் பருப்பு 1 தேக்கரண்டி
வர மிளகாய் 2
மிளகு- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
தேங்காய் -2 மேஜைக்கரண்டி
பூண்டு- 2 பல்
உப்பு -1/2 தேக்கரண்டி, புளி
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கொள்ளு வறுத்துக் கொள்ளவும் நிறம் மாறும் வரை வறுத்து,எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெய்யை காயவைத்து கடுகு, துவரம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் போது , மிளகு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய், புளி மற்றும் உப்பு சேர்த்து இறக்கவும்.
இந்த கலவையை வறுத்து வைத்துள்ள கொள்ளு பருப்புடன் சேர்த்து அரைத்து எடுக்கவும்,சுவையான மனமும், நற்குணமும் நிறைந்த கொள்ளு துகையல் ரெடி இது சூடான சாதம், தோசை அனைத்திற்கும் ஏற்றது.