தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு… நறுக்கிய தேங்காய் – 1/2 கப்
வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 8 பல்
மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
தண்ணீர் – சிறிது
கிரேவிக்கு…
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
தக்காளி – 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தவரங்காய் – 200 கிராம் (சற்று நீளத் துண்டுகளாக நறுக்கியது) தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், வேர்க்கடலை, பூண்டு, மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வதக்க வேண்டும். பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து, அதில் நறுக்கிய கொத்தவரங்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். * விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கொத்தவரங்காய் கிரேவி தயார்.