சென்னை: கத்திரிக்காயில் எத்தனை விதம் செய்து இருப்பீங்க. இந்த தீபாவளிக்கு புது ஸ்பெஷலாக ஒரு செம டிஷ் கம்பு கத்திரிக்காய் மசாலா செய்து பாருங்கள்.
தேவையானவை: கத்திரிக்காய் – அரை கிலோ, கம்பு – அரை கப், பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது), தக்காளி – 4 (நறுக்கியது), பூண்டு – 4 பல் (தட்டவும்), மிளகு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு டீஸ்பூன். கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு, நிலக்கடலை – கால் கப், வெள்ளை எள் – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு 2 உருண்டைகள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயை நீளவாக்கில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து ஒரு கப் அளவுக்குக் கரைத்து எடுத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் கடுகு மற்றும் வெந்தயத்தை ஒரு நிமிடத்துக்கு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்.
பின்பு அதே வாணலியில் கம்பு, நிலக்கடலை மற்றும் வெள்ளை எள் மூன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து, கத்திரிக்காய் துண்டுகளைப் பொரித்தெடுத்துத் தனியாக வைக்கவும். பின்னர் மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை, மிளகு, பூண்டு மற்றும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி கடுகு – வெந்தயப் பொடி சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். புளித்தண்ணீர் சேர்த்துக் கலந்து சர்க்கரை, உப்பு, பொரித்து வைத்துள்ள கத்திரிக்காயைச் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் கம்பு – நிலக்கடலை – எள் கலவையைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
பின்பு அதில் நல்லெண்ணெய் சேர்த்து, தீயைக் குறைத்து, ஓரங்களில் எண்ணெய் பிரிந்துவரும்போது இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.