சென்னை: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பிரண்டைக் காரக்குழம்பு செய்து பாருங்கள்.
தேவையானவை:
இளம் பிரண்டைத் துண்டுகள் – ஒரு கப் (ஓரத்தில் உள்ள நாரை நீக்கவும்)
தோலுரித்த சின்ன வெங்காயம், பூண்டுப் பல் – தலா 10
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
சாம்பார் பொடி – 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, பிரண்டைத் துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிரண்டை நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.