சென்னை: நம்முடைய வீடுகளில் தயார் செய்யப்படும் பிரபலமான உணவுகளாக இட்லி, தோசை உள்ளன. இவற்றுக்கு சுவையான சட்னி- சாம்பார் என்றால் அருமையாக இருக்கும். அந்த வகையில், இவற்றுக்கு ஏற்ற சட்னியாக வேர்க்கடலை சட்னி உள்ளது.
சுவையில் தனி ரகம் கொண்ட வேர்க்கடலை சட்னியில் வைட்டமின்களும் ஊட்டச் சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. மேலும், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் அற்புத சட்னியாகவும் இது உள்ளது. இந்த டேஸ்டி சட்னியை தயார் செய்ய வெறும் 10 நிமிடங்கள் போதும். இப்போது வேர்க்கடலை சட்னி எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – 100 கிராம்
தேங்காய் துருவல் – 1/2 மூடி
வர மிளகாய் – 8
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை: முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் வேர்க்கடலையை சேர்த்து அவை கருகாமல் வறுத்துக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலை மீண்டும் வறுக்க தேவையில்லை.
பிறகு, மிக்சியில் வேர்க்கடலை, துருவிய தேங்காய், வரமிளகாய், புளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், அவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
பிறகு தாளிக்க பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் சேர்த்து கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து, முன்பு அரைத்துள்ள சட்னியில் சேர்க்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த வேர்க்கடலை சட்னி தயார். அவற்றை உங்களுக்கு பிடித்த இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து ருசிக்கலாம்.