சென்னை: ஆரோக்கியம் மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை வழங்கும் பீட்ரூட் சாதம் செய்து பாருங்கள்.
தேவையானவை
பீட்ரூட் – 2
பாஸ்மதி அரிசி – 2 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகதூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: முதலில் பாஸ்மதி அரிசியை பாத்திரத்தில் எடுத்து, அதில் மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி அரை மணிநேரம் நன்கு ஊற வைத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்பு பீட்ருட்டை எடுத்து ஒரு பாத்திரத்தில் துருவி எடுத்து கொள்ளவும். அதன் பின்பு பச்சை மிளகாயை நீளமாக கீறவும், தக்காளி, வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மேலும் அடுப்பில் குக்கரை வைத்து சுத்தம் செய்த அரிசியை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ருசிக்கேற்ப உப்பு போட்டு, மூடி வைத்து, 3 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும்.
பிறகு அடுப்பில் கடாயை வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்ததும், அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு குழையும் அளவுக்கு வதக்கியபின், அதனுடன் மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து சில நிமிடம் நன்கு வதக்கி கொள்ளவும்.
பின்னர் மல்லித்தூளின் பச்சை வாசனை போனபின், துருவிய பீட்ரூட்டை போட்டு, ருசிக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட்டபின் மூடி வைத்து வேக விடவும். இறுதியில் வதக்கிய பீட்ரூட் கலவையானது நன்கு வெந்தபின் சிறிது கிளறிவிட்டதும், இறக்கி வைத்து, வேக வைத்த பாஸ்மதி சாதத்தில் பீட்ருட் கலவையை ஊற்றியபின், கரண்டியால் நன்கு கலந்து சாதத்தின் முழுவதும் படும்படி விரவி விட்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால், அருமையான ருசியில் பீட்ரூட் சாதம் தயார்.