நகோயா: ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் வில்வித்தை பெண்கள் தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்திய வீராங்கனை குங்கும் மோஹோத் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
இறுதிப்போட்டியில் தென்கொரியாவின் ஓ யேஜினை எதிர்கொண்ட குங்கும் மோஹோத், கடுமையான போட்டிக்குப் பிறகு 5-5 என சமநிலை ஏற்பட்ட நிலையில் ஷூட்-ஆஃப் சுற்றுக்கு சென்றார்.
ஒரே அம்பில் வெற்றி
ஷூட்-ஆஃப் சுற்றில் தென்கொரிய வீராங்கனை 8 புள்ளிகள் எடுத்த நிலையில், குங்கும் மோஹோத் துல்லியமாக 10 புள்ளிகளைப் பெற்று வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 6-5 என்ற கணக்கில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
17 வயதான குங்கும் மோஹோத், ஆசிய விளையாட்டில் தனிநபர் ரிகர்வ் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர்வு
இந்த வெற்றியுடன் குங்கும் மோஹோத் இந்த ஆசிய விளையாட்டில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என 3 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
அக்டோபர் 3-ம் தேதி நிலவரப்படி இந்தியா மொத்தம் 80 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இதில் 18 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலம் அடங்கும்.
