ஐபிஎல் 2025 தொடரின் 62வது லீக் போட்டி மே 20ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் அணி சிஎஸ்கேவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 4வது வெற்றியுடன் இத்தொடரை முடித்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் மட்டுமே குவித்தது. தேவால்ட் ப்ரேவிஸ் 42, ஆயுஷ் மாத்ரே 43 மற்றும் சிவம் துபே 39 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் பவுலர்களில் யுவ்திர் சிங் மற்றும் ஆகாஷ் மாத்வால் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

வெற்றிக்கான இலக்காக இருந்த 188 ரன்களை ராஜஸ்தான் அணி துவக்கம் முதலே கட்டுப்பாட்டுடன் அடித்து சென்றது. துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் 36 மற்றும் வைபவ் சூர்யவன்ஷி 57 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 31 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார். இறுதியில் துருவ் ஜுரேல் 12 பந்துகளில் 31 ரன்கள், ஹெட்மேயர் 5 பந்துகளில் 12 ரன்கள் அடித்து 17.1 ஓவரிலேயே 188 ரன்களை கடந்தனர். சிஎஸ்கே பக்கம் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகள் எடுத்தும், அணி 10வது தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இந்த தோல்விக்குப் பின்னர், சிஎஸ்கே கேப்டன் தோனி பேசுகையில், வெற்றி இலக்கை தாங்கள் சரியாக அமைத்ததாக தெரிவித்தார். ப்ரேவிஸ் விளையாடிய இன்னிங்ஸை பாராட்டிய அவர், “நாங்கள் போட்டியின் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததே முக்கிய காரணம்” என்றார். அன்சுல் கம்போஜ் பவுலிங் மிகவும் நுட்பமாக இருந்ததாகவும், பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியதாகவும் கூறினார்.
தொடர்ச்சியான தோல்விகளுக்கு காரணமாக இளம் வீரர்கள் மிகுந்த தாக்குதலோடு விளையாட முயற்சிப்பதே என்றும் அவர் கூறினார். “200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முயற்சித்தால், இடைவெளியின்றி ரன்கள் குவிக்க முடியாது. ஆனால் எங்கள் வீரர்கள் திறமை வாய்ந்தவர்கள். அவர்களிடம் போதிய திறனும் நம்பிக்கையும் உள்ளது. அவர்கள் சீனியர் வீரர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, அழுத்தத்தை சமாளித்து முன்னேற வேண்டும்” என்றார்.
இளம் வீரர்களிடம் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது என்பதால், அவர்கள் அதனை பொறுத்துக்கொண்டு தங்களை மேம்படுத்த வேண்டும் என்றும் தோனி அறிவுரை வழங்கினார். “இது வெறும் விளையாட்டை விளையாடுவது மட்டும் அல்ல, அதை புரிந்து செயல்படுவதுதான் முக்கியம்” என்று கூறிய அவர், எதிர்கால வெற்றிக்கான வழியை இளைய வீரர்கள் கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.