தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டடம் வில்வராயன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் பாலசுந்தர் சிங்கப்பூரில் நடந்த நட்புறவு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று அதிக ரன்கள் குவித்தார். இதையறிந்த வில்வராயன்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் பாலசுந்தருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்தவர் பாலசுந்தர் (32). சிவில் பி.இ. முடித்துள்ளார். மாற்றுத்திறனாளி ஆன இவருக்கு பிறந்தது முதல் இடதுகை பாதிப்பு இருந்துள்ளது. இவரது தந்தை பழனி கூலித்தொழிலாளி. காலமாகி விட்டார் இவரது தாய் விஜயா தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் பாலசுந்தருக்கு கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைக்க வேண்டும் என்பது தீராத தாகம். தீவிரமாக பயிற்சிகள் மேற்கொண்ட பாலசுந்தர் உள்ளூர் அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிகாட்டி உள்ளார். இதற்காக பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். இவரது கிரிக்கெட் பயிற்சிக்கு உறுதுணையாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் செயல்பட்டு வருகின்றனர். போட்டிகளில் பங்கேற்க பல்வேறு விதத்திலும் உதவிகள் செய்து வருகின்றனர்.
கிரிக்கெட்டில் தன் திறமைகளை வளர்த்துக்கொண்ட பாலசுந்தர் கடந்த 2022ம் ஆண்டு காங்கேயத்தில் நடந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி தேர்வில் விளையாடினார். இதில் 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இதையடுத்து அந்த போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றார். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
மேலும் தமிழ்நாடு அணியில் ஏ பி சி என பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று 54 பந்துகளில் 114 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். தொடர்ந்து புனேவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். இதேபோல் கோயம்புத்தூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி நடந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு ஏ-பி அணிகளுக்கு இடையிலான போட்டியில் 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து சாதித்தார்.
இவ்வாறு பல போட்டிகளில் பங்கேற்று விருது மற்றும் கோப்பைகளை பாலசுந்தர் வென்றுள்ளார். மேலும் ஆக்ராவில் தேசிய அளவில் நடந்த இந்தியா- நேபாள் மாற்று திறனாளிகளுக்கான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாலசுந்தர் தேர்வு செய்யப்பட்டு விளையாடினார். கடந்தாண்டு மத்திய பிரதேசம் இந்தூரில் 8 மாநிலங்கள் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான டி20 கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் தேர்வு பெற்றார்.
இந்நிலையில் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி சிங்கப்பூர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த மாற்றுத்திறனாளிகள் அணியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வில்வராயன்பட்டி பாலசுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் பங்கேற்றுள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் சிங்கப்பூரில் புகழ்பெற்ற சிங்கப்பூர் கிரிக்கெட் கிளப் அணியுடன் (மாற்றுத்திறனாளி அல்லாதவர்கள்) நட்புறவு கிரிக்கெட் தொடரில் பங்கு பெற்றனர்.
இந்த தொடரில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் பங்கேற்றுள்ள பாலசுந்தர் முதல் போட்டியில் சிங்கப்பூர் கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிராக 51 பந்தில் 57 ரன்கள் குவித்தார். இதில் சிக்ஸர் 2ம், 4 ரன்ஸ் நான்கும் எடுத்தார். இதேபோல் இரண்டாவது போட்டியில் 23 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். சிங்கப்பூருக்கு சென்ற அணியில் பங்கேற்றும், ரன்கள் குவித்தும் தங்களின் கிராமத்திற்கு பெருமை சேர்த்த பாலசுந்தருக்கு கிராம மக்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.