டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 62வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசும் முடிவை எடுத்தார். இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 187 ரன்கள் எடுத்தது. ஆயுஷ் மாத்ரே 43 ரன்கள் மற்றும் டேவால்டு பிரேவிஸ் 42 ரன்கள் எடுத்தனர்.

வெற்றி இலக்காக இருந்த 188 ரன்களை ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. வைபவ் சூர்யவன்ஷி 57 ரன்களுடன் சிறந்த ஆட்டத்தைத் தந்தார், கேப்டன் சஞ்சு சாம்சன் 41 ரன்கள் எடுத்து தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார். தொடக்கத்திலிருந்தே தாக்குதலைத் தொடங்கிய ராஜஸ்தான், வெற்றியை எளிதாக உறுதி செய்தது.
போட்டி முடிந்த பின்னர் கருத்து வெளியிட்ட சஞ்சு சாம்சன், இந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். பந்துவீச்சு யூனிட்டில் சில முக்கிய வீரர்கள் இல்லாத போதும் ஆகாஷ் மத்வால் சிறப்பாக பந்துவீசியதாக அவர் கூறினார். ஐபிஎல் தொடரில் முமென்டம் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதாகவும், அதை எங்களது பக்கம் திருப்பி வைத்ததால்தான் இந்த வெற்றியை அடைந்தோம் என்றார்.
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை அவர் வியந்து பாராட்டினார். ஜெய்ப்பூரில் குஜராத் அணிக்கு எதிராக அவர் அடித்த சதத்தை நினைவுபடுத்தியும், இந்த போட்டியிலும் மிடில் ஓவர்களில் அவர் விளையாடிய ஆட்டம் மிகச் சிறப்பானதாக இருந்தது என்றும் தெரிவித்தார்.
அதோடு, அவர் அனைத்து பந்துகளையும் தற்கொலை தாக்குதலாக அடிக்கவில்லை. துல்லியமாக, திட்டமிட்டு, சீராக பேட்டிங் செய்ததாக சஞ்சு சாம்சன் குறிப்பிட்டார். இந்த வெற்றி, ராஜஸ்தான் அணிக்கு தொடர்ந்து நிலைக்கும் நம்பிக்கையை வழங்கியிருக்கிறது.