திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கவர்னர் மாளிகையில் வைக்கப்பட்ட பாரத மாதா படம் கேரள அரசியலை பெரும் சர்ச்சையில் மூழ்கடைத்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி கடந்த ஜூன் 4ம் தேதி கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் நடைபெற்ற விழாவில், காவி கொடி ஏந்திய பாரத மாதா படம் இடம்பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வேளாண் அமைச்சர் பிரசாத் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்தார்.
அதேபோல், சமீபத்தில் சாரண-சாரணியர் நிகழ்விலும் அதேபோன்று பாரத மாதா படம் வைக்கப்பட்டதைக் கண்டித்து, அமைச்சர் சிவன்குட்டி நிகழ்வில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கவர்னரின் நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு முரணானவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி அமைப்புகள் கூறி போராட்டத்தில் இறங்கியுள்ளன.
மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிகையான தேசாபிமானி, “கவர்னர் மாளிகை, ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் கிளை அல்ல” என கடும் விமர்சனம் மேற்கொண்டுள்ளது. கேரளா முழுவதும் இடதுசாரி மாணவர் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் கவர்னருக்கு எதிராக எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றன.
கோழிக்கோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பா.ஜ.வினர் அமைச்சர் சிவன்குட்டிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டினர். அவருடைய உருவப்படத்தையும் எரிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தடுக்க முயன்ற இடதுசாரி மாணவர்கள் மற்றும் பா.ஜ.வினருக்கிடையே மோதல் உருவாகி பரபரப்பான நிலை ஏற்பட்டது.
மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே இருந்த ஒத்துழைப்பு சூழ்நிலை தற்போது பதற்றமாக மாறியுள்ளது. பாரத மாதா பட விவகாரம், அரசியல் ஆதிக்கம், மத அடையாளம் போன்ற விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் கவர்னர் தனது அதிகாரங்களை மீறி அரசியல் நோக்குடன் நடந்துகொண்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஜனாதிபதி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் செயல்படும் மாநிலத்தில், பாரத மாதா படத்தை அடிக்கடி பயன்படுத்துவது அரசியலமைப்புச் சீர்மையை கேள்விக்குள்ளாக்கும் முயற்சி என எதிர்ப்புக் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதனால் கேரள அரசியல் மீண்டும் அதிக வெப்பம் அடைந்துள்ளது.