ஆந்திரா: உரிய அனுமதியின்றி தொடர் விடுப்பு எடுத்த 51 அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட டாக்டர்கள் இடமிருந்து எந்த பதிலும் வராததால் பணி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உரிய அனுமதியின்றி கல்லூரி டாக்டர்கள் மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து விடுப்பு எடுத்து வருவதாக ஆந்திர அரசாங்கத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி சத்யகுமார் யாதவ் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் தகவல்களை சேகரித்து. அனுமதி இன்றி பணிக்கு வராத மருத்துவர்களின் பட்டியலைத் தயாரித்தனர்.
இதனை தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் பணியாற்றிய 51 டாக்டர்கள் அனுமதி இல்லாமல் பணிக்கு வராததால் நிரந்தரமாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 8 இணைப் பேராசிரியர்கள், 41 உதவி பேராசிரியர்கள், 2 தொழில் பயிற்சி பயிற்றுனர்கள் அடங்குவர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சத்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், “விளக்கக் கடிதங்கள் வழங்கப்பட்டு பதில் அளிக்க போதிய நேரம் கொடுக்கப்பட்டிருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் இடமிருந்து எந்த பதிலும் வராததால் பணி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டது” என அவர் கூறினார்.