திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அலிபிரி நடைபாதையில் நடந்து செல்கின்றனர். இந்த நடைபாதையில் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி நடமாடுகின்றன. சிறுத்தைப்புலிகளிடம் இருந்து பக்தர்களை காக்க கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பக்தர்கள் ஒன்றாக நடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அலிபிரி பாதையில் இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் நடக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அலிபிரி நடைபாதை 7-வது திருப்பத்தில் உள்ள நரசிம்ம சுவாமி கோவில் சன்னதி அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள், அச்சத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதற்குள் சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தைப்புலியின் தடயங்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை நடமாட்டம் குறித்து பக்தர்களை எச்சரித்து, குழுக்களாக செல்ல அறிவுறுத்தினர். நேற்று காலை முதல் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.