இந்திய ரயில்வே, பயணிகளின் வசதிக்காக பல்வேறு இலவச சேவைகளை வழங்கி வருகிறது. ரயிலில் ஒரு டிக்கெட் வாங்குவது மட்டுமல்லாது, அதனுடன் பயணிக்கு வழங்கப்படும் உரிமைகளையும் வழங்குகிறது. குறிப்பாக, ஏசி பிரிவுகளில் பயணிக்கிற பயணிகளுக்கு படுக்கை ரோல், தலையணை, விரிப்பு துணிகள் உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த வசதிகள் வழங்கப்படவில்லை என்றால், பயணி புகார் கொடுத்து அந்த சேவைக்கான பணத்தைத் திரும்பப் பெறும் உரிமையும் பெற்றுள்ளார்.

உடல் நலக்குறைவுகளுக்கு இடையே பயணிக்க வேண்டிய சூழ்நிலையில், ரயில்வே மூலம் முதலுதவிகள் மற்றும் அவசர மருத்துவ உதவிகள் இலவசமாக வழங்கப்படும். பயணத்தின் போது எதிர்பாராத உடல்நிலை சிக்கல் ஏற்பட்டால், ரயில்வே அதிகாரிகள், டிக்கெட் சேகரிப்பாளர்கள் அல்லது கண்காணிப்பாளர்களை அணுகலாம். அவசியமிருந்தால், அடுத்த நிலை மருத்துவமனையில் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால், பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. மேலும், விருப்பமுள்ள பயணிகள் RE-கேட்டரிங் சேவையின் மூலம் ரயிலில் உணவுகளை ஆர்டர் செய்யும் வசதியும் பெற்றுள்ளனர். இது பயண அனுபவத்தை இன்னும் வசதியாக மாற்றுகிறது.
முக்கியமான ரயில்வே நிலையங்களில் பயணிகள் தங்கவும், தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் லாக்கர்கள் மற்றும் ஆடை அறைகள் வழங்கப்பட்டுள்ளன. சிறிது நேரம் காத்திருக்க வேண்டியபோது, காத்திருப்பு கூடங்களும் டிக்கெட்டுடன் பயணிகளுக்கு அனுமதிக்கப்படுகின்றன. பயணத்தின் போது எந்த சேவைகள் இலவசமாகக் கிடைக்கின்றன என்பதை அறிவதும், அவை வழங்கப்படவில்லை என்றால் புகார் செய்வதும் பயணிகளின் உரிமையாகும்.