சென்னை: தமிழகத்துக்கு ஆகஸ்ட் மாதம் 45.9 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மைக் குழு உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை குழு கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாக கர்நாடக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழக பிரதிநிதி தயாளகுமார் கூறுகையில், “கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தண்ணீர் உரிமையைத்தான் கேட்கிறோம். எனவே உபரி நீரை கணக்கில் கொள்ளாமல் ஆகஸ்ட் மாதத்துக்கான தண்ணீர் வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் மாதம் தமிழகத்துக்கு 45.9 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மைக் குழுத் தலைவர் வினீத் குப்தா உத்தரவிட்டுள்ளார்.