புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு முக்கியத் தகவலை பகிர்ந்தார். கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை அமெரிக்காவுக்கு அழைத்ததாக கூறினார். ஆனால் மோடி அந்த அழைப்பை பணிவுடன் நிராகரித்ததாக தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஜி7 மாநாட்டுக்காக கனடா சென்றபோது டிரம்ப் அவர்களை அமெரிக்கா வந்து டின்னர் சாப்பிட்டு பேசலாம் என்று அழைத்தார். ஆனால் நான் ஒடிசா மக்களின் ஆசை மற்றும் மகாபிரபுவின் பக்தியால் அமெரிக்கா செல்லவில்லை” என்று கூறினார்.

ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ரூ.18,600 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். ஜனதா மைதானத்தில் கூடியிருந்த மக்கள், மோடியின் பேச்சிற்கு உற்சாகமாக கைகள் தட்டி இசைத்தனர். பாஜக ஆட்சி அமைந்த பிறகு இது 6வது முறையாக அவர் ஒடிசா சென்றுள்ளார்.
முந்தைய நாள்களில், மோடி இஸ்ரேல் அருகே உள்ள சைப்ரஸ் நாட்டிற்கும், பின்னர் ஜி7 மாநாட்டுக்காக கனடாவிற்கும் சென்றிருந்தார். மாநாட்டில் பங்கேற்ற அவர், பின்னர் டிரம்பை நேரில் சந்திக்க முடியாமல் விட்டதாகவும், அவர்கள் தொலைபேசியில் 35 நிமிடங்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது அமெரிக்காவுக்கு அழைத்த டிரம்ப், “கனடா வந்துள்ளீர்கள், வாஷிங்டனில் சந்தித்து பேசலாம்” என்று கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் மோடி, மகாபிரபுவின் நாடான ஒடிசா செல்ல வேண்டிய கட்டாயத்தின் காரணமாக அந்த அழைப்பை நிராகரித்ததாகக் கூறினார்.
இந்த நிகழ்வு, பிரதமர் மோடியின் பக்தி உணர்வையும், ஒடிசா மக்களின் மீது உள்ள அன்பையும் வெளிப்படுத்துகிறது. அவர் குறிப்பிட்ட மகாபிரபு என்பவர் பூரி ஜெகநாதர் என்பதும், ஒடிசா மக்கள் அவரை தெய்வமாக கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது.