புதுடெல்லி: இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மகாராஷ்டிராவில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக பாஜக கூட்டணி அரசு மாநில சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ்-தள பதிவில், “கடன் தள்ளுபடி மற்றும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான விவசாயிகளின் கோரிக்கையை அரசாங்கம் புறக்கணிக்கிறது.
யோசித்துப் பாருங்கள், மகாராஷ்டிராவில் மூன்று மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது வெறும் புள்ளிவிவரமா? இல்லை. 767 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 767 குடும்பங்கள் ஒருபோதும் மீள முடியாது. அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. அது அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

விதைகள், உரங்கள் மற்றும் டீசல் ஆகியவற்றின் அதிக விலைகளால் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கடனில் மூழ்கி வருகின்றனர். ஆனால் குறைந்தபட்ச ஆதரவுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கடன் தள்ளுபடி கோரும்போது அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
ஆனால் மோடி அரசாங்கம் கோடிக்கணக்கான கடன் வாங்குபவர்களின் கடன்களை எளிதாக தள்ளுபடி செய்கிறது. இன்றைய செய்திகளைப் பாருங்கள். அனில் அம்பானியின் ரூ. 48000 கோடி ஸ்டேட் வங்கி மோசடி” என்று குறிப்பிட்டுள்ளார்.