மகாராஷ்டிரா: அமெரிக்க அரசிடம் இந்தியா வருத்தம்… மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியையும் [74 வயது] அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் [81 வயது] தொடர்புப்படுத்தி ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமெரிக்க அரசிடம் வருத்தம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி பேசிய ராகுல் காந்தி, தனது சமீப கால பேச்சுக்களில் மோடி சொன்னதையே மீண்டும் மீண்டும் மோடி கூறி வருகிறார். எனக்குத் தெரியவில்லை, ஒரு வேலை அவருக்கு ஞாபக மறதி வந்திருக்கலாம்.
அமெரிக்க அதிபருக்குப் பின்னால் இருந்து ஒருவர் நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டும், உக்ரைன் அதிபர் அமெரிக்கா வந்தபோது, அவரை ரஷிய அதிபர் புதின் என அமெரிக்க அதிபர் [ஜோ பைடன்] அறிமுகப்படுத்தினார். அவர் தனது ஞாபகத்தை இழந்துவிட்டார். அதே போல நமது பிரதமரும் ஞாபகத்தை இழந்து வருகிறார் என்று ராகுல் விமர்சித்தார்.
இந்நிலையில் இந்த கருத்துக்கு தற்போது மத்திய அரசு அமெரிக்காவிடம் வருத்தம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசியதாவது,
நீண்ட கால ஒற்றுமை, விடாமுயற்சி, பரஸ்பர மரியாதை மற்றும் இரு தரப்பு அர்ப்பணிப்பு ஆகியவை மூலம் கட்டமைக்கப்பட்ட பண்முக கூட்டாண்மையை அமெரிக்காவுடன் இந்தியா பகிர்ந்து கொள்கிறது.
இந்த சூழலில் இதுபோன்ற பேச்சுகள் அல்லது அறிக்கைகள் வருவது துரதிருஷ்டவசமானது. இது இருநாடுகளுக்கு இடையிலான அன்பு மற்றும் நட்புறவுடன் ஒத்துப்போகவில்லை. இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.