அகமதாபாத்: விமான விபத்து நடந்த பகுதியில் கட்டிடம் இடிந்து சிதறி கிடந்த இடிபாடுகளில் இருந்து மொத்தம் 800 கிராம் (சுமார் 100 பவுன்) தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கப்பணம், பாஸ்போர்ட்டுகள், பகவத் கீதை ஆகியவற்றையும் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் விமானம் வெடித்து சிதறியதில் அதில் பயணம் செய்த 241 பேர், மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த 5 மாணவர்கள், பொதுமக்கள் 24 பேர் என மொத்தம் 270 பேர் பலியாகினர்.விமானத்தில் பயணம் செய்த விஸ்வாஸ்குமார் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்நிலையில் விமான விபத்து நடந்த சில நிமிடங்களில் அப்பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் ராஜூபடேல் என்பவர் தனது குழுவினருடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார். விபத்தில் காயம் அடைந்தவர்களை சேலைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் பயன்படுத்தி மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேலும் கட்டிடம் இடிந்து சிதறி கிடந்த இடிபாடுகளில் இருந்து மொத்தம் 800 கிராம் (சுமார் 100 பவுன்) தங்க நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கப்பணம், பாஸ்போர்ட்டுகள், பகவத் கீதை ஆகியவற்றையும் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நகைகள் ஆவணபடுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்துறை இணை மந்திரி ஹர்ஸ் சங்கவி தெரிவித்தார்.