பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ஷக்லேஸ்புரா அருகே பெங்களூரு – மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கர்நாடக மாநிலம் அங்கோலா அருகே கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 தமிழக லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஹாசன் மாவட்டம் ஷக்லேஸ்புரா அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலச்சரிவு ஏற்பட்டது.
சாலையில் சென்ற லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் மண்ணில் புதைந்தன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வாகனங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், பாதிப்பு குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில், பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து போக்குவரத்துக்கும் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.