புதுடில்லி: பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை அம்பலப்படுத்த ஜப்பான் நாட்டிற்கு இந்திய பாராளுமன்ற சிறப்பு குழு சென்றுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த இந்த ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகள் மீது தாக்குதல் நடத்தியது. ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்கியது.
பாகிஸ்தானின் இந்த அடாவடிக்கும் இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் நீடித்த இந்த ராணுவ மோதலால் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் ஆதரவு செயல்பாடுகளை உலக அரங்கில் அம்பலப்படுத்தி ராஜிய ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இதற்காக அனைத்துக்கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டது. இந்த குழுவில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அபராஜிதா சாரங்கி, பிரிஜ்லால், பிரதான் பருணா, ஹேமங் ஜோஷி, காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான சர்மான் குர்ஷித், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. ஜான் பிரிட்டாஸ், முன்னாள் தூதர் மோகன் குமார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்று நேற்று காலையில் ஜப்பான் புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பற்றி எடுத்துரைப்பதற்காக புறப்பட்டு சென்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு ஜப்பான் சென்றடைந்தது.
இந்த குழுவினர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். ஜப்பானில் பல்வேறு அரசு நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை சந்தித்து பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை அம்பலப்படுத்துவார்கள். பாராளுமன்ற சிறப்பு குழு ஜப்பானை தொடர்ந்து கொரியா, சிங்கப்பூர், மலேசியாவிற்கு சென்று விளக்கம் அளிக்க உள்ளனர்.