புதுடெல்லி: டெல்லி காவல்துறை முன்பு தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவலை கூடுதல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நேஹா மிட்டல் தெரிவித்துள்ளார். முன்னதாக 2019-ம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் போது துவாரகா முழுவதும் பெரிய விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன. இதை எதிர்த்து டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங் மற்றும் துவாரகா கவுன்சிலர் நித்திகா சர்மா ஆகியோருடன் சேர்ந்து அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து, இந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மார்ச் 11ஆம் தேதி பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் தவிர, முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங், அப்போதைய துவாரகா கவுன்சிலர் நித்திகா சர்மா ஆகியோர் மீதும் பெரிய விளம்பரப் பலகைகள் வைத்ததற்காக வழக்குப் பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் விளம்பரப் பலகைகள் வைக்க அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்திய புகாரில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வழக்கை விசாரிக்க கூடுதல் அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.