பெங்களூரு: ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுக்க முடியாமல் திணறியது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நேற்று மதியம் நடந்தது.
இதில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, தமிழக அரசு, ”மேட்டூர் அணையில் தற்போது 12,490 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
குடிநீர் தேவைக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் தினமும் 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளில் 27.490 டிஎம்சி தண்ணீர் உள்ளது.
தென்மேற்கு பருவமழை அங்கு பரவலாக பெய்து வருவதால், ஜூன் 24-ம் தேதி வரை 4 அணைகளுக்கு 7.236 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது.
இந்நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி ஜூன் 24-ம் தேதி வரை தமிழகத்துக்கு 7.352 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
ஆனால் இந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி வரை 1.985 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. இன்னும் 5.367 டிஎம்சி தண்ணீர் பாக்கி உள்ளது. அதேபோல் கர்நாடகா ஜூலை மாதம் 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்.
காவிரி நீரை கர்நாடக அரசு முறையாக திறந்துவிடாததால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை ஜூன், ஜூலை மாதங்களில் திறந்துவிட உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
கர்நாடக அரசு தரப்பில், “கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் போதிய அளவு நிரம்பவில்லை.
தற்போதுள்ள தண்ணீரை கொண்டு பெங்களூரு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டதால், கர்நாடகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது.
இதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் கூறும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் மாதத்தில் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி நீரும், ஜூலையில் 31.24 டிஎம்சி நீரும் தமிழகத்துக்கு வழங்கப்படுவதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இரு மாநிலங்களின் தண்ணீர் இருப்பு மற்றும் கோரிக்கை குறித்து ஆலோசித்து முடிவை அறிவிக்கவும்” என்று கூறி கூட்டத்தை ஒத்திவைத்தனர். இதனிடையே, தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகா ஏற்க மறுப்பதால், காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது.
இதன் காரணமாக நேற்று இரவு 8 மணி வரை இந்த கூட்டத்தின் முடிவை எஸ்.கே.ஹல்தார் அறிவிக்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.