தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக வழக்கை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, மற்றும் அதன் பின்னர் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாக அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத் துறையின் இந்த சோதனையை தமிழக அரசு கண்டித்து, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. “சோதனை என்ற பெயரில், டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை துன்புறுத்தக் கூடாது” என தமிழக உள்துறை செயலர் மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தின. அதன்படி, வரும் 25ம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் தொடர வேண்டாம் என, அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில், டாஸ்மாக் சோதனை தொடர்பான அமலாக்கத்துறை செயல்பாடுகளை நீதிபதிகள் சரியில்லை என கண்டித்தனர்.
அடுத்த சில நாட்களிலேயே, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு, வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதன் பிறகு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அரசின் கோரிக்கையை ஏற்று, வழக்கை வரும் 7ம் தேதிக்கு பட்டியலிட நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.