சரியான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிடுவது நமது செரிமான ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி, நமது ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு பங்களிக்கிறது. ஒரு சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது அதனால் அசௌகரியம், செரிமான கோளாறு அல்லது பிற மோசமான ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். அந்த வகையில் நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத ஒரு சில உணவுகளையும், அவற்றை ஏன் சாப்பிடக்கூடாது என்பதற்கான காரணத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
சிட்ரஸ் பழங்கள் : ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் அதிக அமிலத்தன்மை உள்ளது. இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது வயிற்றின் ஓரங்களில் இருக்கும் புரணி எரிச்சல் அடைந்து அதனால் அசௌகரியம், நெஞ்செரிச்சல் ஏற்படலாம். இது நாளடைவில் அல்சர் ஏற்படுத்துவதற்கு கூட வாய்ப்புள்ளது. காபி : காபி அமிலத்தன்மை கொண்டது என்ற காரணத்தினால் அது வயிற்றில் உள்ள அமிலத்தை உற்பத்தி செய்வதற்கு தூண்டுகிறது. ஆகவே வெறும் வயிற்றில் காபி குடித்தால் நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது கேஸ்டிரிட்டிஸ் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது.
எனவே எப்பொழுதும் உணவுக்குப் பிறகு அல்லது ஏதாவது தின்பண்டத்தோடு காபி சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. காரமான உணவுகள் : அதிக காரமுள்ள மற்றும் மசாலா சேர்க்கப்பட்ட உணவுகள் வயிற்றின் புரணியில் எரிச்சலை ஏற்படுத்தி நமக்கு பிரச்சனைகளை உண்டாக்கலாம். அதிலும் குறிப்பாக இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது வயிற்றில் பிரச்சனைகள் உண்டாகிறது. இவை ஆசிட் ரிஃப்ளக்ஸ், செரிமானமின்மை அல்லது மோசமான சூழ்நிலைகளில் கேஸ்டிரிட்டிஸ் அல்லது பெப்டிக் அல்சர் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சர்க்கரை நிறைந்த உணவுகள் : சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகள், உதாரணமாக பேஸ்டிரிகள், டோனட் அல்லது பிற சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை நாம் தனியாக சாப்பிடும் பொழுது அதனால் ரத்த சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்கும்.
இது நாளடைவில் இன்சுலின் எதிர்ப்பு திறனுக்கு பங்களிக்கிறது. தக்காளி : தக்காளி அமிலத்தன்மை நிறைந்தவை. எனவே இவற்றை வெறும் வயிற்றில் அதிலும் குறிப்பாக சென்சிட்டிவான நபர்கள் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது எரிச்சல் ஏற்படுகிறது. எப்பொழுதும் தக்காளியை மிதமான அளவில் சரிவிகித உணவின் ஒரு பகுதியாக சாப்பிடுவது நல்லது. கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் : சோடா போன்ற கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை தனியாக சாப்பிடும் பொழுது, அது வயிற்றை விரிவடைய செய்து வயிற்று உப்புசம் மற்றும் அசௌகரியத்தை உண்டாக்கும். மேலும் இது வயிற்று அமில உற்பத்தியை தூண்டி ஆசிட் ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
தயிர் : தயிர் பொதுவாக ஆரோக்கியமானதாக கருதப்பட்டாலும் ஒரு சில நபர்கள் அதனை வெறும் வயிற்றில் சாப்பிட்ட பிறகு அசௌகரியம் அனுபவித்ததாக கூறுகின்றனர். தயிரில் ப்ரோபயாடிக் உள்ளது மற்றும் அது அமிலத்தன்மை கொண்டதாக அமைகிறது. இதன் காரணமாக செரிமான பிரச்சனை அல்லது வயிற்று உப்புசம் உண்டாகலாம். எனவே உங்களுடைய செரிமான ஆரோக்கியத்தை சரியாக பராமரிப்பதற்கு நீங்கள் எந்தெந்த உணவுகளை எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலமாக அசௌகரியம் மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம். எப்பொழுதும் அனைத்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவை சாப்பிடுவது நல்லது. இது உங்களுடைய செரிமான ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும்.