சென்னை: எந்திர மயமான, பரபரப்பான இன்றைய வாழ்க்கைச் சூழலில் நமக்கு உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டதால், உடல் எடை அதிகரித்தல் பெரும் பிரச்சினையாக உருவாகி உள்ளது. அதிகரித்த உடல் பருமனின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்.
உடல் எடையை உணவின் மூலம் எப்படி குறைப்பது? என்பது இன்று பலரின் கேள்வியாக இருக்கிறது. அந்தக் கேள்விக்கு ஒரு எளிய பதில் இருக்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை உண்பதன் மூலம் உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்பு, சேராமல் தடுக்க முடியும்.
ஒருவர் தினமும் குறைந்தபட்சம் 400 கிராம் அளவிற்குப் பழங்களைச் சாப்பிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரித்துரை செய்துள்ளது. இதன் மூலம் எடை குறைப்பு, உடல் பருமன், இதய நோய்கள், பக்கவாதம், சில வகையான புற்றுநோய் போன்ற உடல் நல பிரச்சினைகளின் அபாயத்தை வெகுவாகக் குறைக்க முடியும் என W.H.O. தெரிவித்து இருக்கிறது.
பழங்களில் அதிக அளவு கலோரிகள் இருக்கும்; கொழுப்பு இருக்காது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வாரத்தில் மூன்று நாட்களுக்கு, இங்கே குறிப்பிடப்பட்ட பழங்களை சாலட் ஆக தயாரித்து சாப்பிடலாம்.
நமது தட்பவெப்ப நிலையில், எளிதாக கிடைக்கும் நாட்டுக் கமலா ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி ஆகிய மூன்று பழங்களிலும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இவற்றில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளும், இந்தப் பழங்களைக் குறிப்பிட்ட அளவில் சாலட் ஆக தயாரித்து சாப்பிடலாம்.
மேலும், தர்பூசணி, திராட்சை, மாதுளை, பேரிக்காய், முலாம் பழம், போன்ற பழங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, இந்தப் பழங்களைச் சாப்பிடுவதன மூலம் எளிதில் எடை குறைவதற்கான வாய்ப்புள்ளது. தர்பூசணி இயற்கையாகவே கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. கோடையில் இதனை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் மட்டும் கிளைசெமிக் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது.
வாழைப்பழத்திற்கு பசி உணர்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதன் காரணமாகவே விரத, நாட்களில் வாழைப்பழம் சாப்பிட்டாலே போதும் என முன்னோர்கள் கூறினார்கள். எனவே வாழைப் பழத்தை சாலட்டுகளில் சேர்த்துக்கொண்டால் உடல் எடையைச் சுலபமாகக் குறைக்க முடியும். அது போலவே, அன்னாசிப்பழத்தை தொடர்ந்து சாப்பிடும்போது அதில் உள்ள ‘ப்ரோமிலைன்’ என்ற வேதிப்பொருள் உடல் எடையைக் குறைக்க உதவும்.