மதுரை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதலில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு நிகழ்வு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளும் பயனாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். முதல் கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மோதிரத்துக்கும் தனித்துவமான வரிசை எண் இடம்பெறும் என்றும், பாதுகாப்பான முறையில் அவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள், தேவையான பதிவுகள் மற்றும் தகுதிகளுடன் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்.
மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் ஜோயாலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஜோயாலுக்காஸ் குறைந்தபட்சமாக ஒரு பைசா தயாரிப்பு சார்ந்த கட்டணத்தை குறிப்பிட்ட நிலையில், அதே விலையை ஏற்றுக்கொண்ட கல்யாண் ஜுவல்லர்ஸுக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டு 70:30 என்ற விகிதத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதல் கட்டமாக அங்கு 1,106 தங்க மோதிரங்கள் வந்தடைந்ததாகவும் தகவல் வெளியாகியது.
இதற்கிடையே உசிலம்பட்டி மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை மற்றும் நிகழ்ச்சிக்கு அதிகமானோர் வரக்கூடிய சூழல் காரணமாக, விழாவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட முந்தைய அறிவிப்பில் உசிலம்பட்டியே தொடக்க இடமாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இறுதி நிகழ்ச்சி இடம் குறித்து அரசு தரப்பின் உறுதிப்படுத்தலை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
