சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை நோக்கி, “புரட்சித் தலைவி அம்மா.. எங்களை ஆசிர்வதியுங்கள்” என்று கூறி கண்கலங்கி அழுதார் பண்ருட்டி எம்எல்ஏ மோகன்.
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று (மே 11) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. தற்காலிகப் பேரவைத் தலைவர் சோழவந்தான் கருப்பையா முன்னிலையில், புதிய உறுப்பினர்கள் அனைவரும் வரிசையாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு வருகின்றனர். முதலில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் பிற உறுப்பினர்கள் தங்களது உறுதிமொழியை ஏற்றுப் பொறுப்பேற்று வருகின்றனர்.
பதவியேற்பு நிகழ்வின் போது, பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ மோகனின் பெயர் அழைக்கப்பட்டதும், அவர் இருக்கையிலிருந்து எழுந்து வந்து உணர்ச்சிப்பூர்வமாகப் பதவியேற்றார். சட்டமுறைப்படி இந்திய அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற அவர், திடீரென மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை நோக்கி, “புரட்சித் தலைவி அம்மா.. எங்களை ஆசிர்வதியுங்கள்” என்று கூறி கண்கலங்கி அழுதார். இந்த எதிர்பாராத நெகிழ்ச்சியான தருணத்தால் ஒரு நிமிடம் சட்டமன்றமே அமைதியில் ஆழ்ந்தது.
அதிமுக உறுப்பினரின் இந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வை ஆளுங்கட்சி வரிசையில் இருந்த முதலமைச்சர் விஜய் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார். ஜெயலலிதா மீதான தனது விசுவாசத்தைப் பதவியேற்பு மேடையிலேயே வெளிப்படுத்திய மோகனின் செயல், அங்கிருந்தவர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.