சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்ற உறுப்பினராக முறைப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
அவைக்கு வருகை தந்த அவர், முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வணக்கம் செலுத்தினார். தற்காலிகச் சபாநாயகர் முன்னிலையில் தனது உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட அவர், பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
பதவியேற்பு நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தன்னை வெற்றிபெற வைத்த விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணித் தலைவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் கூறினார். இந்த வெற்றியை மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு உரித்தாக்குவதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், தனது தொகுதி மக்களுக்குத் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றப் போவதாகவும் அவர் உறுதி அளித்தார்.
புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்த பிரேமலதா, ஆட்சி நிர்வாகத்தைக் கற்றுக் கொள்ள அவருக்கு உரிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.