புதுடெல்லி: கூடுதல் வரிகள் விதிக்கப்படவில்லை… மருந்துகள் மற்றும் மின்னணுவியல் போன்ற துறைகளில் அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு இதுவரை கூடுதல் வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலின்படி, “ஆகஸ்டு 7 முதல் அமலுக்கு வரும் வகையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மொத்தப் பொருட்களில் சுமார் 55 சதவீதம் இந்த பரஸ்பர வரிக்கு உட்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்டு 27-ந்தேதி முதல் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் மதிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் மின்னணுவியல் போன்ற துறைகளில் அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு இதுவரை கூடுதல் வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகளின் தாக்கத்தை மதிப்பிடுவது குறித்து கருத்துகளைப் பெறுவதற்காக ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்துறை உள்பட அனைத்து தரப்பினரிடையே அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், சிறு-குறு-நடுத்தர தொழில்முனைவோா்கள் மற்றும் தொழில்துறையின் அனைத்து பிரிவுகளின் நலனைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. அமெரிக்காவுடனான இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதங்களில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் மார்ச் (2025) முதல் நடைபெற்று வருகின்றன.
இதுவரை ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக ஜூலை 14-18 வரை வாஷிங்டனில் நடைபெற்றது. 6-வது சுற்று பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்கக் குழு வருகிற 24-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஏற்றுமதிகளில் அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிகளின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று அவர் மேலும் கூறினார்.