கொல்கட்டா: உதவித் தொகையை அபகரித்த ஆண்கள்… மேற்கு வங்கத்தில், முந்தைய திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை ஆண்கள் பலர் அபகரித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை, அக்கட்சி நிர்வாகியே ஒப்புக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வராக பதவியேற்றுள்ள சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி தலைமையிலான முந்தைய ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், ‘லஷ்மிர் பந்தர்’ திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவு பெண்களுக்கு மாதம் ரூ.1,500 மற்றும் பழங்குடியின, பட்டியலின பெண்களுக்கு ரூ.1,700 வழங்கப்பட்டு வந்தது. புதிய ஆட்சியில் இந்த தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்பட உள்ளது என்றார்.
மேலும், இந்த திட்டத்தில் 30 லட்சம் தகுதியற்ற பயனாளிகள் இருந்ததாகவும், திரிணமுல் நிர்வாகி ரகிபுல் ஷேக் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் பல ஆண்டுகளாக முறைகேடாக உதவித்தொகை பெற்றதாகவும் கூறினார். போலீஸ் விசாரணையில், “பணம் வந்ததால் பெற்றுக்கொண்டோம்; கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அதையே கூறினர்” என ரகிபுல் ஷேக் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.