தஞ்சாவூர்: நீண்ட காலமாக பிறப்புச் சான்றிதழ் இல்லாமல், அதன் காரணமாக ஆதார் அட்டை உள்ளிட்ட எதையும் எடுக்க முடியாமல் தவித்து வந்த, பின் தங்கிய குக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்குழந்தைகளுக்கு சுகாதாரத்துறை ஏற்பாட்டில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு காரணமான சுகாதாரத் துறையினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஊராட்சி பெத்தநாச்சி வயல் பகுதி பின் தங்கிய குக்கிராமம் ஆகும். இப்பகுதி பெற்றோர்கள் போதிய கல்வி அறிவு பெறாத மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். போதிய வழிகாட்டுதல்கள் இல்லாததால், தங்கள் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறாமல் இருந்து விட்டனர்.
இந்நிலையில், ஊமத்தநாடு ஊராட்சி, பெத்தநாச்சிவயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மூகாம்பிகை, ஆசிரியை நாகூர் மாலா ஆகியோர் கோரிக்கையின்படி, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் கலைவாணி வழிகாட்டுதலின்படி, வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் அறிவுறுத்தலின்படி, மருத்துவர் ஸ்ரீநிதி முன்னிலையில்,
15 மாணவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் திங்கள்கிழமை பள்ளியில் வைத்து வழங்கப்பட்டது.
ஊமத்த நாடு சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் பெத்தநாச்சிவயல் கிராமத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வு செய்து 15 மாணவர்களுக்கான பிறப்பை ஆதாரங்களின் அடிப்படையில், பதிவு செய்து அதன் பிறகு பள்ளியில் வைத்து சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதன் மூலம் மாணவர்களுக்கு இதுவரை எடுக்கப்படாமல் இருந்த ஆதார் அட்டை மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கு உதவியாக உள்ளது என பள்ளி தலைமை ஆசிரியர் நன்றி தெரிவித்தார்.
இதுபோன்று பிறப்புச் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரில் சென்று பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.