திருச்சி: திருச்சி கே.கே.நகர் சுந்தர்நகர் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் அரிய வகை தேவாங்கு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து தேவாங்கை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
பெரிய கண்கள், மெலிந்த உடல், நீண்ட கை, கால்களுடன் காணப்படும் தேவாங்கு இரவு நேரங்களில் அதிகம் செயல்படும் உயிரினமாகும். பூச்சிகள், சிறிய பல்லிகள், பறவைகளின் முட்டைகள் உள்ளிட்டவற்றை உணவாக உட்கொள்ளும்.
சுமார் 18 முதல் 26 செ.மீ. நீளம் கொண்டதாகவும், 85 முதல் 350 கிராம் வரை எடை கொண்டதாகவும் தேவாங்குகள் காணப்படுகின்றன. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் உயிரினமாகவும் இது கருதப்படுகிறது.

கே.கே.நகர் பகுதியில் குடியிருப்புக்குள் தேவாங்கு இருப்பதை பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அதனை பத்திரமாக பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
சுமார் 6 மாத வயதுடையதாக கருதப்பட்ட அந்த தேவாங்கு பின்னர் எம்.ஆர்.பாளையம் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக விடப்பட்டது.
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேவாங்குகள் காணப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நகர விரிவாக்கம் மற்றும் இயற்கை வாழிட மாற்றம் காரணமாக இவ்வகை உயிரினங்களின் வாழிடம் பாதிக்கப்படுவதால், பொதுமக்கள் அவற்றை துன்புறுத்தாமல் பாதுகாப்புடன் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
