தஞ்சாவூர்: வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றனர் மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி, ஆணையர் வெ. தீபனா விஸ்வேஸ்வரி.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கான மரம் அறுவை இயந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த இருவரும் இணைந்து தெரிவித்தது:
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக, தஞ்சாவூர் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு வருகிறது. மாநகரிலுள்ள வடிகால் வாய்க்கால்கள் 80 கி.மீ. தொலைவுக்கு பொக்ளின் இயந்திரம் மூலம் தூர் வாரும் பணி நடைபெறுகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன.
மரங்கள் விழுந்தால் அவற்றை அகற்ற தேவையான தளவாடப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன. மாநகரில் குப்பைகள் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் சூப்பர் எல் நினோவின் தாக்கத்தால் அதீத மழை பெய்தால், மழைநீரை சேமிக்கும் வகையில் குளங்களுக்கான நீர் வரத்து பாதைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கல்லணைக் கால்வாய் மற்றும் வடவாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த ஆறுகளிலிருந்து சிவகங்கை பூங்கா குளம், அய்யன்குளம், அழகிகுளம், ஜைனகுளம், கருணாசாமி கோயில் குளம் போன்ற பல்வேறு குளங்களில் நீர் நிரப்பினால், மாநகரில் நீர் ஆதாரம் பெருகும். எனவே, இந்தக் குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் மாவட்ட ஆட்சியருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றனர்.
