செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளத்தால் சாலை அடித்து செல்லப்பட்டது. மேலும் 100 ஏக்கருக்கு மேலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.
மன்னார் வளைகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முதல் கொட்டிய கனமழையால் மதுராந்தகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பாய்ந்தது.
அச்சரப்பாக்கம் அடுத்த வட மணிபாக்கம் கிராமத்தில் ஏரி நிரம்பி, உபரிநீர் பாய்ந்ததால் தரைப்பாலம் மூழ்கி திண்டிவனத்தில் இருந்து ஒரத்திக்குச் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. பாக்கம், மதுராந்தம், வேடதாங்கல் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் நிரம்பியதால் அதன் அருகில் இருந்த விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்தது.
மதுராந்தகம் ஏரிக்கு வரும் சுமார் 8000 கன அடி தண்ணீர் அப்படியே கிளியாற்றில் பாயும் நிலையில், பவுஞ்சூர்- தச்சூர் வழியாக செங்கல்பட்டு நோக்கி 50 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து சிக்கிக்கொண்டது. மதுராந்தகத்திலிருந்து எல் எண்டத்தூர், பவுஞ்சூர், தண்டரைப்பேட்டை செல்லும் சாலைகளில் தண்ணீர் அதிகப்படியாக பாய்ந்ததால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.