சென்னை: தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட ஒருங்கிணைந்த சோதனையில், கணக்கில் வராத பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என மொத்தம் ரூ.1.73 கோடிக்கு மேல் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநகராட்சி, நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், வருவாய்த்துறை, வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது கணக்கில் வராத ரொக்கப்பணம் மட்டும் சுமார் ரூ.13 லட்சம் கண்டறியப்பட்டதாகவும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் வாயிலாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ரூ.1.59 கோடி தொகையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 666 என கூறப்பட்டுள்ளது.
சோதனை நடைபெற்ற அலுவலகங்களில் ஆவணங்கள், பணப்பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்டவை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கைப்பற்றப்பட்ட பணம் எந்தெந்த பணிகளுக்காக பெறப்பட்டது, இதில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
