தஞ்சாவூர்: கலைஞர் கனவு இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பயிற்சி ஆட்சியர் உத்கர்ஷ் குமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பேசுகையில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. இத்திட்டத்தில் ஐந்து சதவீத வீடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அனைத்து ரயில் நிலையங்களிலும் பார்வைத் திறன் மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி ரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை ஒலிபெருக்கியில் அறிவிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நிபந்தனை இன்றி 100 நாள் வேலை வழங்க வேண்டும். விண்ணப்பித்து விடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.