ஊட்டி: நீலகிரி மாவட்டம் வனப்பகுதியை அதிகம் கொண்ட மாவட்டம். இங்குள்ள காடுகளில் புலி, சிறுத்தை, காட்டு மாடுகள், யானை, கரடி போன்ற வன விலங்குகள் உள்ளன.
நீலகிரி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காட்டு மாடுகள், கரடிகள் போன்ற வன விலங்குகள் உணவு தேடி அலைவதை காணலாம்.
இந்நிலையில், குன்னூர் அருகே உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட வசம்பள்ளம், பழத்தோட்டம் பகுதியில் பிளாஸ்டிக், வீணாகும் உணவுப் பொருட்கள், கழிவுகளுடன் குப்பைகளை மக்கள் சாலையில் வீசி வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் உணவு தேடி அலையும் கரடி ஒன்று, சாலையோர குப்பையில் ஏதேனும் உணவு கிடைக்குமா என தேடி வருகிறது. உணவுக் கழிவுகள் அடங்கிய பிளாஸ்டிக் பையை இழுத்துக்கொண்டு ஓடுவது தொடர்கிறது.
உணவுடன் பிளாஸ்டிக் சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சிலர் வீடியோ எடுத்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எனவே, வனத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.